செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி முறையின் உதவியுடன் முற்றிலும் மனிதர்களின் பார்வையின்றி முடிக்கப்பட்ட IVF (மருத்துவ உதவியுடன் கருத்தரித்தல்) முறையின் மூலம் உலகின் முதல் குழந்தை பிறந்துள்ளது. இந்த புதிய முறையில், வழக்கமாக மனிதர்களால் கையால் மேற்கொள்ளப்படும் Intracytoplasmic Sperm Injection (ICSI) என்ற செயல்முறை 23 படிகளும் முழுமையாக தானியங்கி முறையில், ஏஐ உதவியுடன் முடிக்கப்பட்டது.

இந்த சாதனையை அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் மெக்ஸிகோவின் குவாடலஜாராவில் உள்ள Conceivable Life Sciences என்ற நிறுவனத்தில் உள்ள நிபுணர்கள் டாக்டர் ஜாக்ஸ் கோஹென் தலைமையில் உருவாக்கினர். Hope IVF Mexico மருத்துவமனையில் 40 வயதான ஒரு பெண், டோனர் முட்டைகளின் உதவியுடன் இந்த முறையில் கருத்தரித்து ஒரு ஆரோக்கிய ஆண் குழந்தையை பெற்றார். ஐந்து முட்டைகள் இந்நவீன முறையில் கருக்கூட்டப்பட்டதில் நான்கு வெற்றிகரமாக கருக்கூட்டப்பட்டன, மேலும் அவற்றில் ஒன்று வெற்றிகரமாக வளர்ந்து, பிளாஸ்டோசிஸ்ட் நிலையில் தணிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டதன் மூலம் குழந்தை பிறந்தது.

இந்த முறையில், AI மூலமாக சிறந்த விந்தணுவை  தேர்ந்தெடுத்து, லேசர் மூலம் அதனை இயங்காதவாறு செய்து, முட்டைக்குள் நுழைத்தல் உள்ளிட்ட அனைத்து செயல்களும் தானாகவே மிகச் சீரான முறையில் நடந்தன. இது IVF சிகிச்சையில் ஒரு பெரிய புரட்சியாகக் கருதப்படுகிறது. இது, மனிதர்களின் தளர்வுகள், தேர்ச்சியின் மாறுபாடு போன்றவற்றைத் தவிர்க்கின்றது. எதிர்காலத்தில் இது IVF சிகிச்சையை மேலும் துல்லியமானதும், தானியங்கியுமானதுமான முறையாக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.