மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ள பீகார் மாநிலத்தின் சிவான் மாவட்டத்தில், குடித்திருந்த நபர்களை கைது செய்ய முயன்ற போலீசாரை கிராம மக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகோலி கிராமத்தில் போலீசார் கைது செய்த ஒருவரை போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றபோது, கூட்டமாக வந்த கிராம மக்கள் தாக்குதல் நடத்தியதோடு, கைது செய்யப்பட்ட நபரையும் விடுவித்துவிட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதேபோல், கடந்த செவ்வாய்க்கிழமை ரோஹ்தாஸ் மாவட்டத்தில் போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, பெண் போலீசாருடன் சேர்த்து ஆறு பேர் காயம் அடைந்தனர். போலீசாரை கட்டைகளாலும், கற்களாலும் தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த மாதம் அரரியா மாவட்டத்தில் குற்றவாளியை கைது செய்ய முயன்றபோது போலீஸ் குழுவின் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தியதில், உதவி உப-ஆய்வாளர் ராஜீவ் ரஞ்சன் மால் பலத்த காயங்களால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.