
சென்னை கோடம்பாக்கம் பிரகதீஸ்வரர் காலனி இரண்டாவது தெருவில் சந்தியா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சந்தியாவுக்கு உறவினரான பரத் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சந்தியா கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சந்தியாவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய சிவா என்பவருடன் நிச்சயம் செய்தனர். சந்தியாவும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. இரு வீட்டார் முன்னிலையில் நவம்பர் 17 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருமண அழைப்பிதழ் அச்சடித்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்தனர். இந்த நிலையில் சந்தியாவின் பெற்றோரும் உறவினர்களும் திருமணத்திற்கு தேவையான துணிகளை வாங்க கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது சந்தியா தூக்கில் சடலமாக துங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.