மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா சுவாமிகள். இவர் குமரியில் நடைபெற்ற சமய மாநாட்டில் கலந்து கொண்டார். இவர் அவ்வப்போது தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து கருத்துக்களை தெரிவிப்பார். அந்த வகையில் தற்போது மும்மொழி கல்வி கொள்கை விவகாரம் தமிழகத்தில் பரபரப்பான விஷயமாக பேசப்படும் நிலையில் அது பற்றி தன் கருத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ஆங்கிலம் என்பது அடிமை மொழி. எனவே அதனைத் தவிர மற்ற அனைத்து மொழிகளையும் நாம் கற்றுக் கொள்ளலாம். எனவே தமிழகம் முழுவதும் ஆங்கில வழி பள்ளிகளை மூடிவிட்டு தமிழ் வழி பள்ளிகளில் மட்டும் கற்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் மத்திய பாஜக அரசு தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அதாவது மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டும் தான் கல்விக்கான நிதியை விடுவிப்போம் என்று மத்திய பாஜக அரசு தெரிவித்துள்ள நிலையில் இரு மொழி கொள்கை மட்டும் தான் என்றென்றும் தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் என்று திமுக அரசு தெரிவித்துவிட்டது.

ஆனால் பாஜகவினர் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுவதாகவும் அரசு பள்ளிகளில் மட்டும் தான் இரு மொழிக் கொள்கை இருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகிறார்கள். மேலும் இது தொடர்பாக பாஜக மற்றும் திமுக இடையே கருத்து மோதல் என்பது நிலவும் நிலையில் தற்போது மதுரை ஆதீனம் அனைத்து ஆங்கில வழி பள்ளிகளையும் மூடவேண்டும் என்று கருத்து சொன்னது பேசும் பொருளாக மாறியுள்ளது.