
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் “துணிவு” படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இதனை முன்னிட்டு திருச்சி மாநகரில் 6 தியேட்டர்களில் இன்று அதிகாலை 1:30 மணிக்கு ரசிகர் மன்றத்தினருக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. திருச்சி மாரிஸ் பாலம் அருகிலுள்ள தியேட்டரிலும் துணிவு படம் நள்ளிரவு திரையிடப்பட்டது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் அங்கு திரண்டனர்.
இதற்கிடையில் ரசிகர்கள் படம் திரையிடுவதற்கு முன்பு நள்ளிரவு 12.30 மணி அளவில் மாரிஸ் பாலத்தில் நின்றுகொண்டு அந்த வழியாக சென்ற பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை கைகளால் தட்டி ஆரவாரம் செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர்.
இவ்வாறு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் ரசிகர்கள் அங்கும் இங்கும் ஓட்டம் பிடித்தனர். அதன்பின் திட்டமிட்டபடி நள்ளிரவு காட்சி அந்த தியேட்டரில் திரையிடப்பட்டது. இதனிடையில் காவல்துறையினரின் தடியடியில் 10-க்கும் அதிகமான அஜித் ரசிகர்களுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. அத்துடன் இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..