இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் மட்டும் விளையாடுவார்கள். அதன்படி நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதியது. மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய அணியும் குமார் சங்ககாரா தலைமையிலான இலங்கை  அணியும் மோதிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.

இதனால் இந்திய அணி மாஸ்டர்ஸ் டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு யுவராஜ் சிங் முக்கிய காரணமாக அமைந்தார். அதாவது இலங்கை அணியின் லகிரு திரிமான்னே பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது இர்பான் பதான் பந்தை வீசினார். அந்தப் பந்தை லகிரு அடித்தபோது பீல்டிங் செய்த யுவராஜ் சிங் முழுவதுமாக குதித்து தன்னுடைய இரண்டு கைகளாலும் அந்த பந்தை கேட்ச் பிடித்து தரையில் விழுந்தார். இருப்பினும் அவர் பந்தை கீழே போடவில்லை. அவர் 43 வயதிலும் முன்பு விளையாடிய அதே பார்மில் இருக்கிறார்‌. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.