
ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில், 15 நோயாளிகளின் மரணத்தில் தொடர்புடையதாக ஒரு 40 வயது மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 2021 முதல் ஜூலை 2024 வரையிலான காலத்தில், 12 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என மொத்தம் 15 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்த மரணங்களுக்கு அவர் வேண்டுமென்றே காரணமாக இருந்ததாக அரசுத் தரப்பின் வழக்கறிஞர்கள் உறுதி செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மருத்துவர், தனது கவனிப்பில் இருந்த நோயாளிகளுக்கு மயக்க மருந்தும் தசை தளர்த்தி மருந்தும் கலந்த ஒரு சக்திவாய்ந்த கலவையை செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மருந்து கலவை நோயாளிகளுக்கு முன்னறிவிப்பின்றி செலுத்தப்பட்டதுடன், சுவாச தசைகள் முடங்கியதால் சில நிமிடங்களிலேயே அவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவரது கவனிப்பில் இருந்த நோயாளிகள் 25 முதல் 94 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இந்த கொடூரமான சம்பவம் மருத்துவர்கள் மற்றும் பொது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், ஜெர்மன் ஊடகங்கள் அவரை “ஜோஹன்னஸ் எம்.” என அடையாளம் காண்கின்றன.
தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சட்ட நடவடிக்கைகள் மேலும் வேகமாக முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு மருத்துவ துறையில் ஒரு பெரும் பீதியை உருவாக்கியுள்ளது.