
தமிழ்நாடு அரசின் நிதித்துறை, ஒரே பதவியில் 30 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை (போனஸ் உயர்வு) குறித்து புதிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. 1998ஆம் ஆண்டு வெளியான அரசாணை எண் 216, 2009ஆம் ஆண்டு வெளியான அரசாணை 234 மற்றும் 2017ஆம் ஆண்டு வெளியான 303 ஆகியவற்றின் அடிப்படையில், பணியாளர்களுக்கு அடிப்படை ஊதியத்தின் 3% அளவில் போனஸ் உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய திருத்திய ஊதியக் கட்டமைப்பிலும் தொடரும் எனவும் நிதித்துறை தெரிவித்துள்ளார்.
ஆனால், 2000ஆம் ஆண்டு வெளியான நிதித்துறை கடிதம் எண் 35681-ன் படி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வுகளைத் தவிர்த்து ஒரே பதவியில் தேக்கமடைந்த பணியாளர்கள், போனஸ் உயர்வுக்கு தகுதியில்லை எனவும் விளக்கப்பட்டுள்ளது. மேலும், 2020 மற்றும் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதியன்று நடைபெற்ற கணக்குத்தணிக்கையின் அடிப்படையில், அலுவலக உதவியாளர் மற்றும் கணக்குத் தணிக்கைத் துறையில் 30 ஆண்டு சேவை முடித்தவர்களுக்கு போனஸ் உயர்வு வழங்கும் முன்மொழிவுகள் மீது ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டுள்ளன.
இதனிடையே, தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தில் நடந்த வழக்கில், அலுவலக உதவியாளர் பதவியிலிருந்து பதிவு எழுத்தர் பதவிக்கு நேரடி பதவி உயர்வு வாய்ப்பு இல்லாததால், அந்தப் பணியாளர்களுக்கு ஒரு போனஸ் உயர்வு வழங்கக்கூடிய தகுதி இருப்பதாக தீர்ப்பாயம் கூறியுள்ளது. அதாவது, பதவி உயர்வு வாய்ப்பு இல்லாத நிலையை கருத்தில் கொண்டு, இந்தத் துறையின் பணியாளர்கள் நிதித்துறையின் 2000ஆம் ஆண்டு கடிதத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். எனவே, அலுவலக உதவியாளர் பதவியில் நீண்டகால சேவையை முடித்தவர்களுக்கும், ஒரு போனஸ் உயர்வு வழங்கும் தீர்மானம் அமைய வாய்ப்பு இருப்பதாக நிதித்துறை விளக்கமளித்துள்ளது.