
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் சில குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டும் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் சுமார் 3200 பேருந்துகள் இயங்கும் நிலையில் இதில் 1500 பேருந்துகள் கட்டணமில்லா பேருந்துகள். இந்நிலையில் சமீப காலமாக சென்னையில் மாநகரப் பேருந்துகளில் செல்லும் பெண் பயணிகளின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருவதால் தற்போது இலவச பேருந்துகளை அதிகரிக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி சிவப்பு நிறத்தில் எக்ஸ்பிரஸ் பேருந்துகளாக செயல்படும் மாநகர பேருந்துகளை இலவச பேருந்துகளாக மாற்ற போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 174 மாநகர பேருந்துகளை விடியல் பயணத்திட்ட பேருந்துகளாக மாற்றி பெண்களுக்கு இலவச பயணத்தை வழங்க உள்ளனர். மேலும் இலவச மகளிர் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டால் இன்னும் கூடுதல் பெண்கள் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.