
ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில், 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் 101 ரன்கள் அடித்துத் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார். இளம் வயதில் இவ்வளவு பெரிய சாதனை செய்ததற்குப் பின்னணியில், அவரது சிறு வயது ஆர்வமும், தந்தை சஞ்சீவின் உறுதிப்பாடும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில் கடந்த , 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் தனது தந்தையுடன் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் ஜெர்சியில் 6 வயது சிறுவனாகப் போஸ் கொடுத்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இதேபோல், அவரது வயது தொடர்பான சர்ச்சைகளும் மீண்டும் எழுந்துள்ளன.
அதாவது, வைபவ் தனது வயதை குறைத்து காட்டியுள்ளதாக சில சமூக ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், அவரது தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி இதை உறுதியாக மறுத்தார். “8.5 வயதில் பிசிசிஐ பரிசோதனைக்கு சென்றுள்ளார். அவர் யு-19 இந்திய அணிக்காக ஆடியுள்ளார். மீண்டும் சோதனை செய்யத் தயாராக இருக்கிறோம்,” என்றார். வைபவ் 2011 ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று பிறந்தவர். அவர் தொடக்கமாக விளையாடிய கிரிக்கெட் பயணம், தனது வீட்டின் புறநகர் பகுதியில் பந்தை தந்தையால் வீசப்படும்போது தொடங்கியது. அவரது இயல்பான திறமையை அடையாளம் கண்ட சஞ்சீவ், சமஸ்திபூரில் உள்ள அகாடமியில் பயிற்சி ஏற்பாடு செய்தார். பின்னர் மனிஷ் ஓஜாவின் கீழ் பாட்னாவில் பயிற்சி தொடரப்பட்டது.
14 வயதிற்குள், வைபவ் பல முக்கிய இளைஞர் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்துள்ளார். ஹேமன் டிராபி, வினூ மன்கட் டிராபி, சேலஞ்சர்ஸ் டிராபி மற்றும் ACC U-19 ஆசிய கோப்பை உள்ளிட்ட போட்டிகளில் அவர் முன்னணியில் விளங்கியுள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக U-19 இந்திய அணிக்காக 58 பந்துகளில் சதம் அடித்ததும், அவரது தேசிய அடையாளத்தை உறுதி செய்தது. தற்போது ஐபிஎல் டி20 லீக்கில் செய்த அதிரடி சதம், வைபவ் சூர்யவன்ஷி என்ற பெயரை இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கையாக உயர்த்தியுள்ளது.