
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானியர்களை நாடு விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. இந்த நிலைமையில், பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் இந்தியாவில் தங்கி வாழ அனுமதி கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் சீமா கூறியதாவது, “நான் பாகிஸ்தானின் மகளாக இருந்தேன். ஆனால் இப்போது இந்தியாவின் மருமகளாக இருக்கிறேன். நான் இந்திய அரசின் பாதுகாப்பில் இருக்கிறேன். தயவுசெய்து எனக்கு இங்கு வாழ அனுமதி வழங்குங்கள்,” என்றார். சீமா தனது இவ்வாறு கூறும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதும் சமூக ஊடகங்களில் பரவியது.
சீமா ஹைதர் 2023 மே மாதத்தில் பாகிஸ்தானின் கராச்சி நகரத்தை விட்டு, தனது நான்கு குழந்தைகளுடன் நேபாளம் வழியாக இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவில் வந்த பின், உத்தரப்பிரதேசத்தின் கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் வசிக்கத் தொடங்கினார். சீமா, இந்தியர் சச்சின் மீணாவை மணந்து, இந்துமதத்தையும் ஏற்றுக்கொண்டார் எனக் கூறுகிறார். இதற்கிடையில், இந்த வருடம் மார்ச் மாதம் சீமா மற்றும் சச்சினுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
சீமாவின் வழக்குரைஞர் ஏ.பி.சிங் கூறுகையில், “சீமாவின் நிலைமை மற்ற பாகிஸ்தானியர்களின் நிலைமையிலிருந்து மாறுபட்டது. அவரின் அனைத்து ஆவணங்களும் உள்துறை மற்றும் ஏ.டி.எஸ்-இல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், அவரின் மனுவும் குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது,” என்று தெரிவித்தார். சீமா மற்றும் அவரது குடும்பத்தினர் பாகிஸ்தான் ஆதரவு உள்ள கட்சிகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து மரண மிரட்டல்களைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
சீமா ஹைதர் மற்றும் சச்சின் மீணா இருவரும் 2019-ஆம் ஆண்டு ஆன்லைன் விளையாட்டு மூலம் அறிமுகமாகி, அதன் பிறகு காதல் வளர்ந்து, வாழ்க்கை அமைத்துள்ளனர். தற்போது அவர்கள் இந்தியாவில் தங்குவதற்காக சட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் சீமா ஹைதர் விவகாரத்தில் மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது சற்று பரபரப்பாகவே பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.