
திமுக அமைச்சர் பொன்முடி பாலியல் தொழிலாளி பெண்கள் உடலுறவு பற்றி சைவம் மற்றும் வைணவ மதத்துடன் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் திமுக கட்சியின் எம்பி கனிமொழி கூட இப்படிப்பட்ட கொச்சையான வார்த்தைகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்றார். இந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் அவரை திமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
ஆனால் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கினால் மட்டும் போதாது அமைச்சர் பதவியையும் பறிக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் தற்போது வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் பொன்முடி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் கட்சிப் பதவியில் இருந்து நீக்கி கண்துடைப்பு நாடகம் செய்வதை ஏற்க முடியாது.
விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிட கழக நிகழ்ச்சியில் விலைமாதர் மற்றும் வாடிக்கையாளர் இடையே நடந்த உரையாடலை இந்து மதத்தின் புனித சின்னங்களான சைவம் மற்றும் வைணவத்துடன் இணைத்து பேசியதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. இவ்வளவு தரம் தாழ்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி எந்த ஒரு பகுதிக்கும் தகுதி இல்லாதவர். அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் கட்சி பதவியில் இருந்து நீக்கி மட்டும் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களை ஏமாற்றுகிறார்.
திமுக துணை பொதுச்செயலாளர் பதவிக்கு தகுதி இல்லாத ஒருவர் எப்படி அமைச்சராக மட்டும் இருக்க தகுதியுடையவர் ஆவார். அவரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும். அமைச்சர் பொன்முடி பேசியநினைத்து உண்மையில் முதல்வர் ஸ்டாலின் வருத்தப்பட்டால் அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். மேலும் பெண்களையும் இந்து மதத்தையும் அவமானப்படுத்திய அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.