
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வினோபா காலனி பகுதியைச் சேர்ந்த பாண்டி–புனிதா தம்பதியர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இவர்களில் கடைசி மகனான அரவிந்த் மீது வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் உள்ளிட்ட 16 வழக்குகள் மேலூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.
தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் அரவிந்த், கடந்த இரவு மதுபோதையில் வீட்டில் சண்டையிட்டு தனது தாயை அவதூறாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மூத்த சகோதரர் ராஜா, வீட்டில் இருந்த இரும்புக்கம்பியால் அரவிந்தை தலையில் பலமான வகையில் தாக்கியுள்ளார்.
இதில் இடையே தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த மேலூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, அரவிந்தின் உடலை கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, ராஜா மேலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில், தம்பி அரவிந்த் தினமும் வீட்டில் சண்டை போட்டு, தாயை அவமதிக்கும் அளவுக்கு பேசியதால் கோபத்தில் இந்த செயலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
குடும்பத் தகராறால் ஒரே குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட இந்த கொலை சம்பவம், மேலூர் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.