
சென்னை மாவட்டம் புளியந்தோப்பு பகுதியில் 7 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வந்தார். அந்த சிறுமியின் தாய் புரசைவாக்கம் பகுதியில் இருக்கும் நகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி இளம்பெண் தனது மகளை தாய் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றார். இந்த நிலையில் எதிர் வீட்டில் வசிக்கும் சேகர் என்பவர் எங்க வீட்டுக்கு வா, டிவி பார்க்கலாம் என கூறி சிறுமியை அழைத்து சென்று ஆடைகளை கழற்றி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என சிறுமியை மிரட்டியுள்ளார். அதன் பிறகு சோகமாக இருந்த சிறுமியிடம் இளம்பெண் என்ன நடந்தது என கேட்டார்.
உடனே சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் சேகரின் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டபோது, நான் தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்துவிடு. இதை பெரிது படுத்திவிடாதே என சேகர் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த இளம்பெண் அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து சேகருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சேகரை கைது செய்தனர். அவர் ஐயப்பன் கோவிலில் பூசாரியாக வேலை பார்ப்பது குறிப்பிடத்தக்கதாகும்.