திருவாரூர் மாவட்டம் பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு திருநாவுக்கரசு(35). இவரது மனைவி சிந்து பைரவி(28). இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதில் ஆண் குழந்தையும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளது.

இவர்களது வீட்டில் டேபிள் ஃபேனில் ஒயர் பற்றாக்குறை காரணமாக மற்றொரு வயரை இணைத்து உபயோகப்படுத்தி உள்ளனர். அந்த ஒயர்கள் இணைக்கப்பட்ட இடத்தில் டேப்ரோல் சுற்றாமல் இருந்தது. இணைக்கப்படாத அந்த பகுதி தரையில் கிடந்தது.

நேற்று சிந்து பைரவி தனது 7 மாத பெண் குழந்தைக்கு உணவு ஊட்டுவதற்காக மிக்ஸியில் சாதத்தை அரைத்துள்ளார். அதன் பிறகு சாதத்தை எடுத்துச் சென்றபோது எதிர்பாராதவிதமாக சிந்து பைரவி தரையில் கிடந்த ஒயர் மீது காலை வைத்துவிட்டார்.

இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்ப்பட்ட சிந்து பைரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிந்து பைரவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.