உத்தரப் பிரதேசம் பரேலியில், “அம்மா, நான் நிரந்தரமாக தூங்கப் போறேன்” என தனது தாயிடம் கூறிய 28 வயதான ராஜ் ஆர்யா, காவல் நிலையத்தில் ஒரு இரவு கழித்த பிறகு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதாவது ராஜ் மற்றும் அவரது மனைவி சிம்ரன் இடையேயான உறவு பல மாதங்களாகவே சண்டை சச்சரவுடன்  இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், ராஜ் மீது தாக்குதல் நடத்தியதோடு, அவரை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கியதால்தான் அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறுகின்றனர். சிம்ரனின் சகோதரர் போலீசாக இருப்பதால் தன் சகோதரியின் கணவரை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் ராஜ், தனது மனைவியை திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சஹாரன்பூரில் உள்ள அவரது மாமனார் வீட்டிற்கு அழைத்து செல்ல முயன்றுள்ளார். ஆனால் சிம்ரனின் குடும்பம் அதை எதிர்த்து, ராஜையும் அவரது தந்தையையும் தாக்கியதாக ராஜின் சகோதரி புகார் தெரிவித்துள்ளார். பின்னர், சிம்ரனின் குடும்பம், ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், ராஜ் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டதாகவும், அங்கு அவரை சிம்ரனின் காவல்துறை சகோதரர் மற்றும் மற்ற அதிகாரிகள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

காவலிலிருந்து திரும்பிய ராஜ், மிகுந்த மன உளைச்சலில் சிக்கிய நிலையில், “நான் இப்போது தூங்கப்போகிறேன், என்னை தொந்தரவு செய்யாதீர்கள்” என தாயிடம் கூறியுள்ளார். தாயார் அதை சாதாரண மன அழுத்தம் என்று நினைத்தாலும், பின்னர் அவரை எழுப்ப சென்றபோது, ராஜ்  தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். குடும்பத்தினர், இது ஒரு திட்டமிட்ட துன்புறுத்தல் காரணமாக நிகழ்ந்த தற்கொலை எனக் கூறி, சிம்ரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். போலீஸ் அதிகாரி அஜய் குமார் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன், குடும்பத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக புகார் வந்தவுடன் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.