நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் பிரகாஷ்-வனிதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வரும் நிலையில் இவர்களுக்கு கவின்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவனுக்கு 14 வயது ஆகும் நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற நிலையில் காலை 11 மணிக்கு மேல் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு வகுப்பறையில் இருந்து சென்றுள்ளான். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மாணவன் வகுப்புக்கு திரும்பாததால் ஆசிரியர்கள் அங்கு சென்று பார்த்த போது மாணவன் மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.

உடனடியாக மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். மாணவனின் மரணத்திற்கான காரணம் குறித்து கேட்டு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவிய நிலையில் தற்போது மாணவனின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது கவின்ராஜுக்கும் அந்த பள்ளியில் படிக்கும் வேறொரு மாணவனுக்கும் இடையே தகறாறு இருந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இவர்கள் இருவரும் பள்ளியில் வைத்தே ஒருவருக்கொருவர் அடித்து தாக்கி கொண்டனர். இதேபோன்று நேற்று கவின்ராஜ் கழிவறைக்கு சென்றபோது மீண்டும் அவர்களுக்குள் தகறாறு ஏற்பட்டது. இதில் அந்த மாணவன் கவின்ராஜை சரமாரியாக அடித்ததில் மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக ஆசிரியர் ஒருவர் புகார் கொடுத்த நிலையில் கவின்ராஜை தாக்கியதாக கூறப்படும் மாணவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.