சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் பிடுங்காமல் விடமாட்டேன் என்று பேசி இருந்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இப்படியான நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், அண்ணா அறிவாலயத்தை அசைத்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்தவர்கள் அடங்கி மண்ணோடு மண்ணாக போனதுதான் கடந்த கால வரலாறாக உள்ளது. எப்போதெல்லாம் திமுகவை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு புறப்படுகின்றார்களோ எப்போதெல்லாம் திமுகவை அளிப்பேன் என்று கூறுகிறார்களோ அப்படி கூறுபவர்களின் அழிவுக்கான தொடக்க புள்ளி தான் அது என்பது பொருள்.

திமுகவின் ஆலயமாக கருதப்படும் அறிவாலயத்தை அண்ணாமலையால் தொட்டுக் கூட பார்க்க முடியாது. அவரால் எப்படி அங்கிருக்க கூடிய செங்கலை அகற்ற முடியும். இரும்பு மனிதரான தமிழக முதல்வர் தொட்டு 75 ஆண்டுகளை கடந்த இந்த திமுகவை அசைத்துப் பார்க்க இன்னொருவர் புதிதாக பிறந்தது தான் வர வேண்டும். இவர்களுடைய அனைத்து ஆவண பேச்சுக்கும் தமிழக மக்கள் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய சட்டமன்ற தேர்தலில் மிருக பலத்துடன் திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைத்து பதிலடி கொடுப்பார்கள் என்று சேகர் பாபு ஆவேசமாக பேசியுள்ளார்.