வங்கக் கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் இது நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கு 490 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி-நெல்லூர் இடையே கரையை கடக்கிறது. இதற்கிடையில் கடந்த 6 மணி நேரத்திற்கும் மேலாக 10 கிலோமீட்டர் வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே 490 கிலோமீட்டர் அருகே மையம் கொண்டிருப்பது போன்று புதுச்சேரியிலிருந்து 460 கிலோமீட்டர் தூரத்திலும், நெல்லூரில் இருந்து 530 கிலோமீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் அதிதீவிர கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் இன்னும் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதால் முன்கூட்டியே பள்ளி கல்லூரிகள் முதல் அரசு அலுவலகங்கள் வரை விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.