
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் செந்தில் குமாரவேலு. கடந்த 2018-ஆம் ஆண்டு செந்திலுக்கு கனகவள்ளி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது 25 பவுன் தங்க நகைகள், 2.50 லட்சம் பணம், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்த நிலையில் செந்தில் மேலும் 10 பவுன் தங்க நகை, இருசக்கர வாகனம் வாங்க பணம் தருமாறு தனது மனைவியிடமும், மாமனார் ராஜேந்திரனிடமும் கேட்டு வந்தார். மேலும் செந்திலின் தாய் கலாவதி, தம்பி ஹரிகிருஷ்ண வேலு, உறவினர் முருகன் ஆகியோர் கனகவள்ளியை கொடுமைப்படுத்தியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் ராஜேந்திரன் தனது மகளை பார்க்க சென்றபோது அவரை அவமானப்படுத்தி அனுப்பியதாக தெரிகிறது. இதனால் ராஜேந்திரன் மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு தந்தை உயிரிழந்ததற்கும், தனது இறப்பிற்கும் செந்தில், கலாவதி உட்பட 4 பேர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு கனகவள்ளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி செந்தில் உள்பட நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.