
திருவள்ளூர் மாவட்டம் ராமர் கோவில் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி (36) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 15 வருடங்களாக நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் சுரேஷ் திருவள்ளூரில் உள்ள மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி (40) என்ற பெண்ணுடன் கள்ளகாதல் ஏற்பட்டது. இதில் ராஜேஸ்வரி கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில் அவரை சுரேஷ் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ராஜேஸ்வரி தனியாக இருந்தார். இதற்கிடையில் ராஜேஸ்வரி அடிக்கடி கடைக்கு வந்து வியாபாரம் செய்தார். இது பார்வதிக்கு தெரிய வந்த நிலையில் அவரை கண்டித்துள்ளார்.
இருப்பினும் கடந்த 9-ம் தேதி ராஜேஸ்வரி மார்க்கெட்டுக்கு வந்தார். இதனை தெரிந்து கொண்ட பார்வதி மற்றும் அவருடைய உறவினர்கள் அங்கு சென்று ராஜேஸ்வரி உடன் தகராறு ஈடுபட்டனர். அப்போது பார்வதி தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றினார். பின்னர் அருகில் இருந்த விளக்கில் அவருடைய சேலை பட்டு ராஜேஸ்வரி மீது தீப்பிடித்து எரிந்தது. இதில் அவருக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பார்வதி, சுரேஷ் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர். இதற்கிடையில் நேற்று காலை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ராஜேஸ்வரி உயிரிழந்தார். இதனால் கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.