
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒன்னஹள்ளி கிராமத்தில் ரக்ஷிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார். இவர் அங்கு விடுதியில் தங்கி படித்து வருகிறார். இதில் நேற்று முன்தினம் ரக்ஷிதாவுக்கு பிறந்தநாள். இதனால் அவர் தன்னுடைய பிறந்தநாள் விழாவை குடும்பத்துடன் கொண்டாட முடிவு செய்து பெங்களூருவில் இருந்து காரில் சொந்த ஊருக்கு சென்றார்.
இந்த கார் நந்தி கிராமம் என்ற பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்துக் குள்ளானது. இந்த கோர விபத்தில் பலத்த காயம் அடைந்த ரக்ஷிதா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பிறந்தநாள் கொண்டாட சென்ற மாணவி விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.