
உச்சநீதிமன்றத்தில் பெண் ஒருவர் கொல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மீது ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது அந்த நீதிபதிக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அவர் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பழகி வந்ததாக அவர் புகார் கொடுத்துள்ளார். அந்தப் பெண்ணுடன் அவர் நெருக்கமாக இருந்த நிலையில் பின்னர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர் மீது பதியப்பட்ட குற்றவியல் வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கொல்கத்தா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தது. அதன் பிறகு அந்த நீதிபதிக்கு ஜாமினும் வழங்கப்பட்டது. இது தொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது, ஒரு ஆணும் பெண்ணும் பரஸ்பர சம்பந்தத்துடன் உறவில் இருக்கும் நிலையில் அந்த உறவு கசந்தவுடன் குற்றவியல் வழக்கு தொடர்வது என்பது அதிகரித்துவிட்டது.
அனைத்து விதமான பரஸ்பர உறவையும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. இருவருக்கும் இடையே உள்ள உறவு சம்மதத்துடன் நடந்தது.
எனவே இதனை பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக நடந்தது என்று கூறுவதை ஏற்க முடியாது. அதை கற்பழிப்பு என்று வாதிடக்கூடாது என்றனர். மேலும் இந்த வழக்கில் நீதிபதிகள் தங்களுடைய கண்டனத்தையும் பதிவு செய்தனர்.