நாட்டில் இன்றைக்கு ஆதார் கார்டு இன்றி எந்தவொரு வேலையும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. அதேபோன்று பான் கார்டும் பண பரிவர்த்தனைகளில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இந்த 2 முக்கிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. பல முறை இதற்குரிய கால அவகாசத்தையும் நீட்டித்து வருகிறது.

இப்போது ரூ.1000 அபராதம் செலுத்தி பான் மற்றும் ஆதார் எண்ணை பொதுமக்கள் இணைத்து வருகின்றனர். இதற்குரிய காலக்கெடு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பலரும் தங்களது ஆதார் மற்றும் பான் எண்ணை ஆன்லைன் மூலம் இணைக்க முற்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆதார்-பான் எண் இணைப்பு தோல்வியடைவதாக பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். காரணம் உங்களது ஆதார் மற்றும் பான் அட்டை விவரங்கள் ஒரே மாதிரியாக இல்லாததுதான். உதாரணமாக உங்களது பெயர், பிறந்ததேதி, பாலினம் ஆகியவற்றில் ஏதேனும் எழுத்து பிழை இருக்கலாம். அதை கவனித்து சரிசெய்த பின் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க முயற்சிக்கலாம்.