
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணா காலனி பகுதியில் கோகுல கிருஷ்ணன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலதிபர் மற்றும் என்ஜினீயர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில் மறுமணம் செய்வதற்காக ஆன்லைனில் வரன் தேடியுள்ளார். அப்போது அழகான இளம் பெண் ஒருவர் அவரை ஆன்லைனில் தொடர்பு கொண்டுள்ளார். அந்தப் பெண் தன்னை ரதிமீனா என்று அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் தானும் மணமகன் தேடுவதாக கோகுலகிருஷ்ணனிடம் கூறிய நிலையில் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்தப் பெண் ஒரு ஆன்லைன் செயலியை கோகுலகிருஷ்ணனுக்கு அனுப்பி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறலாம் என்று கூறியுள்ளார். இதை நம்பி அவரும் ரூ.23 லட்சத்தை அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பிறகு ரதிமீனாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோகுலகிருஷ்ணன் கோயம்புத்தூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.