சென்னை தாம்பரம் அருகே சேலையூர் என்ற பகுதியில் சீதாலட்சுமி மற்றும் சுபா ஆகிய பெண்களிடம் தனித்தனியாக 5 மற்றும் 2 சவரன் தங்க நகைகளை பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் திருடிவிட்டு சென்ற நிலையில் இது தொடர்பாக சேலையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் வசிக்கும் அருணாச்சலம் (27) என்பது தெரிய வந்தது. இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் தெரிய வந்துள்ளது.

அதாவது அருணாச்சலம் சிவில் இன்ஜினியரிங் முடித்த நிலையில் அவருக்கு சரியான வேலை கிடைக்காததால் ஆன்லைன் வர்த்தகத்தில்  முதலீடு செய்துள்ளார். இதில் அவருக்கு ரூ.15 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு கடனாகியுள்ளது. இந்த கடனை அடைக்க அவருக்கு சரியான வேலை இல்லாததால் youtubeல் வீடியோ பார்த்து திருட முடிவு செய்துள்ளார். அதன்படி தனியாக சுற்றித்திரிந்த பெண்களை நோட்டமிட்டு நகைகளை பறித்துள்ளார். அவர் திருடிய 5 பவுன் நகையை வீட்டில் தங்கையின் திருமணத்திற்காக கொடுத்த நிலையில் 2 பவுன் நகையை அடகு வைத்து பணத்தை செலவு செய்துள்ளார். இவருக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் தற்போது அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.