
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே சேலையூரில் நவநீதகிருஷ்ணன் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவர் ஆன்லைனில் முதலீட்டில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவருக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவர் அதிக அளவில் கடன் வாங்கியும் அதில் முதலீடு செய்துள்ளார். இருப்பினும் அவருக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் கடன் சுமை அதிகரித்தது. இந்நிலையில் ஆன்லைன் முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் நவநீதகிருஷ்ணன் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது நவநீதகிருஷ்ணன் ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவருடைய குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சேலையூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அதில், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்ததில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டது. நான் ரூ.30 லட்சம் வரை இழந்து கடனாளியாக மாறிவிட்டேன். இதனால் ஏற்பட்ட மன வேதனையில் இருந்து மீண்டு வர முடியாததால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் இதனை கைப்பற்றிய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.