கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேகேபள்ளி பகுதியில் விஜயகுமார் (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சந்தியா (27) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் சந்தியா 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் விஜயகுமார் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லை ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் விஜயகுமார் தன் மனைவியுடன் வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த சந்தியாவின் தாயார் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சிப்காட் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கணவன் மனைவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கினர். இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுடைய அறையில் விஜயகுமார் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பங்குச் சந்தை முதலீட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்தது. மேலும் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.