உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் சதார் காவல் நிலைய எல்லை பகுதிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து, ஒரு அதிர்ச்சிக்குறிய குடும்ப வழக்கின் விவரம் வெளியாகியுள்ளது. 2015-ல் திருமணமான பெண் ஒருவர், தனது மாமனார் தனது மீது பாலியல் வன்முறை முயற்சி செய்ததாகவும், அதைப் பற்றிக் கணவரிடம் கூறியபோது, கணவரே தன்னை அடித்ததோடு, பின்னர் தொலைபேசியில் முத்தலாக் வழங்கியதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தினர் தொடர்ந்து வரதட்சணை கேட்டு அந்த பெண்ணை துன்புறுத்தியுள்ளனர். குறிப்பாக 3 லட்ச ரூபாய் வரதட்சணை வேண்டும் என்று கணவன் குடும்பத்தினர் கேட்ட நிலையில் அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததால் தொடர்ந்து மாமனார் டார்ச்சர் செய்து வந்துள்ளார். அந்த வகையில் சம்பவ நாளில் அதாவது கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி திடீரென மருமகளின் அறைக்குள் நுழைந்த மாமனார் ஆபாசமாக பேசியதோடு அந்த பெண்ணின் உடைகளை கிழித்தெறிந்துள்ளார்.

பாலியல் பலாத்காரமும் செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்தப் பெண்ணின் கணவர் அதனை தடுக்க முயற்சிக்கவே இல்லை. அதற்கு மாறாக தன் மாமனார் பாலியல் பலாத்காரம் முயற்சி செய்ததாக கூறியதற்கு அந்த பெண்ணை அவர் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி செல்போன் மூலமாக முத்தலாக் அதாவது விவாகரத்து வழங்கினார். இதன் காரணமாக தற்போது பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.