மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரீவா மாவட்டத்தில் ஒரு ஹோட்டலில் நடந்த  சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அதாவது நகரத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே ஸ்வாத் ஃபேமிலி ரெஸ்டாரன்ட் என்ற உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

அந்த ஹோட்டலில் கடந்த திங்கட்கிழமை வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைனில் கடாய் பன்னீர் ஆர்டர் செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டுக்கு வந்த உணவை திறந்ததும் அதில் கரப்பான் பூச்சி இருப்பதை பார்த்த வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் பிரதிபாபால் உடனடியாக நடவடிக்கை எடுத்து உணவகத்தின் உரிமத்தை இடை நிறுத்தியுள்ளார். மேலும் உணவகத்தில் நடைபெறும் நடவடிக்கைகளை முழுவதுமாக தடுத்து நிறுத்தி உணவகத்தை மூடியுள்ளார். அந்த உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை செய்த போது உணவகத்தின் சமையல் பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய் திறந்த நிலையில் இருந்தது.

பழைய மற்றும் அழுக்கு பாத்திரங்கள், உணவு தரச் சான்றிதழ் இல்லாமை போன்ற பல மோசமான குறைபாடுகள் இருந்ததை கண்டறிந்தனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாவட்ட நிர்வாகம் மக்களின் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி இந்த நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டது.

இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அப்பகுதியில் ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த புகாரை அளித்த வாடிக்கையாளர், “குடும்பத்துக்காக உணவு ஆர்டர் செய்தேன் ஆனால் அதில் இறந்து கிடந்த பூச்சியால் எங்களது அனைவரது மனநிலையும் கெட்டுப் போய்விட்டது.

இந்த சம்பவம் வெறும் பண விரயம் அல்ல. ஆரோக்கியத்திற்கும் ஆபத்து விளைவிக்கக் கூடியது. இது போன்ற சம்பவங்களை உணவுத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உணவகங்களின் தரத்தை மேம்படுத்த வலியுறுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.