
எழும்பூரில் உள்ள தலைமை கழகத்தில் மதிமுக நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். இந்த நிலையில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என் ரவியை கவர்னர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவை
தீர்மானம்-1: இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஆளுமை திறனோடு வழிநடத்தும் திராவிட மாடல் அரசின் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதுடன் 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டும் என மதிமுக நிர்வாக குழு விழைகிறது.
தீர்மானம்-2 : மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிடவும், உரிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும், மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்கவும் மூன்று பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்த தமிழ்நாடு அரசுக்கு மதிமுக நிர்வாக குழு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம்-3 :கவர்னர் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என் ரவி இழந்துவிட்டார். அவரை ஜனாதிபதி தமிழ்நாடு கவர்னர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று மதிமுக நிர்வாக குழு கேட்டுக் கொண்டுள்ளது.
தீர்மானம்-4: வக்பு திருத்த சட்டம் நாட்டின் பன்முகத்தன்மைக்கும் அரசியல் சட்டத்தின் தனி மனித உரிமைக்கும் சவால் விடுகிறது. அந்த சட்டத்தை ஜனநாயக வழியில் போராடி முறையடிக்க வேண்டும்.
தீர்மானம்-5 :இலங்கை ராணுவத்தோடு பிரதமர் நரேந்திர மோடி ராணுவ ஒப்பந்தம் செய்திருப்பது கண்டனத்திற்குரியது. தினமும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் தாக்கப்படுவதும் குறித்து பிரதமர் இலங்கை அதிபரிடம் கண்டனத்தை பதிவு செய்யாததை இந்த கூட்டம் கண்டித்துள்ளது.
தீர்மானம்-6 : தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ் மொழியை பயன்படுத்தவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை வரவேற்கிறோம்.
தீர்மானம்-7 : கடந்த பத்தாம் தேதி வெளியான ஜாட் என்று ஹிந்தி திரைப்படத்தில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்.
தீர்மானம்-8 : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32-வது ஆண்டு தொடக்க விழா மே 6-ஆம் தேதியிலிருந்து இரண்டு வாரத்திற்கு கழக தோழர்களின் இல்லங்களில் கொடியேற்றுவது, பொதுமக்களுக்கு இனிப்பு கொடுப்பது, ஆதரவற்றோருக்கு உதவி செய்வது பொதுக்கூட்டங்கள் நடத்தி தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது என கழக நிர்வாக குழு தீர்மானித்துள்ளது.
தீர்மானம்-9 : நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி தொடர்ந்து செயல்படுகிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃபு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு கோயம்புத்தூர், சென்னை, திருச்சி, கோவை இடங்களில் மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.