மயிலாடுதுறையில் உரிய ஆவணங்களை சரி பார்க்காமல் அவசரமாக விற்கப்பட்ட இருசக்கர வாகனத்தை திரும்ப தருமாறு கேட்டு பெண் வாடிக்கையாளரை தாக்கிய தனியார் இரு சக்கர வாகனத்தின் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் அவையாம்பாள்புரம் பகுதியில் நிவேதா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 11-ஆம் தேதி பூம்புகார் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தனது கணவர் குமார் பெயரில் இருசக்கர வாகனத்தை 6900 முன்பணம் கட்டி மாத தவணைக்கு வாங்கியுள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே குமார் இருசக்கர வாகனம் வாங்கி பணம் செலுத்தாதது நிறுவனத்திற்கு தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்தை திருப்பி தருமாறு நிவேதாவிடம் இருசக்கர வாகன நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.

ஆனால் நிவேதா இருசக்கர வாகனத்தை திருப்பி கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் தனியார் நிறுவன நிர்வாகி சுந்தரராஜன் இருசக்கர வாகனத்தில் வந்த நிவேதாவை வழிமறித்து தாக்கியதாக தெரிகிறது. இதனால் நெவேதாவின் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின் அறுந்து ஆடை கிழிந்ததாக கூறப்படுகிறது. உடனே நிவேதா மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து நிவேதா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து சௌந்தரராஜன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.