ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை நடந்து கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் இபிஎஸ் கைக்கு அதிமுக சென்றுவிட ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவி வகித்து வரும் நிலையில் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தேர்தல்களிலும் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று ஓபிஎஸ் சமீப காலமாக தெரிவித்து வருகின்றார். இப்படியான நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், கட்சியில் எதையும் எதிர்பார்க்காமல் அதிமுகவிற்கு உழைக்கும் உண்மை தொண்டன் தான் செங்கோட்டையன்.

நானும் அவரும் சேர்ந்து கட்சியில் பல சிக்கல்களை சந்தித்து அம்மாவுடன் இருந்து பல பணியாற்றியுள்ளோம். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் விரும்புகிறார்கள். கட்சி ஒன்றிணைந்தால்தான் தேர்தலில் வெல்ல முடியும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். அதை தான் தொடர் தோல்விகள் மூலமாக மக்கள் அதிமுகவிற்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர். கட்சியின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பின்னால் தான் இருக்கின்றார்கள்.

அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். ஒருங்கிணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. கட்சி ரகசியத்தை வெளியில் சொல்ல முடியாது. அதை சொன்னால் கட்சிக்கு தடையாக இருக்கும். இடைத்தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி பயத்தில் இருக்கின்றார். இனி வரும் தேர்தலில் கட்சி ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஆர்பி உதயகுமாருக்கு எல்லாம் பதில் சொல்ல நான் தயாராக இல்லை. அவர் பேசும் மொழி சரியில்லை. அவர் பேசுவதை பேசட்டும், மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.