கேரளா மாநிலத்தில் வயநாடு நிலச்சரிவு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது மத்திய அரசுக்கும் கேரள அரசுக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, கேரளா அரசுக்கு கடந்த 23ஆம் தேதி கனமழை தொடர்பாகவும் நிலச்சரிவு தொடர்பாகவும் மத்திய அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் கூட எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அங்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் அனுப்பப்பட்டனர். ஆனாலும் கேரளா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதற்காக அவர்கள் என்ன உஷார் நடவடிக்கைகளை எடுத்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்‌. ஆனால் இதனை முதல்வர் பினராயி விஜயன் முற்றிலுமாக மறுத்துள்ளார். அதாவது இந்திய புவியியல் ஆய்வு மையமானது நிலச்சரிவு தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கவில்லை. அவர்கள் நிலச்சரிவு வந்த பிறகுதான் எச்சரிக்கை கொடுத்தார்கள். இருப்பினும் இந்த நேரத்தில் நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய சூழலில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருவருக்கொருவர் குறை சொல்லாமல் மீட்பு பணியில் கவனம் செலுத்துவது தான் அவசியம் ஆகும்.