
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ் திரையுலகில் நடிகைகள் பாலியல் புகார் தெரிவிக்கும் நிலையில் அந்த புகார்கள் உண்மையாக இருப்பின் அரசாங்கம் உடனடியாக விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அதன்பிறகு சென்னையில் நடைபெற்று வரும் ஃபார்முலா 4 கார் பந்தயம் பற்றி விமர்சித்தார். ஏற்கனவே அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கார் பந்தயத்தை நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று மற்றும் இன்று கார் பந்தயம் நடைபெற்று வருகிறது.
இன்று இறுதி நாள் கார் பந்தயம் நடைபெறுகிறது. இந்த கார் பந்தயம் நடைபெறும் இடத்திற்குள் நாய் ஒன்று புகுந்து விட்டது. இதனால் நாய் பிடிக்கும் வேலைகளும் நடைபெற்று வருகிறது. இதை சுட்டிக்காட்டி இது கார் ரேஸா அல்லது நாய் ரேஸா என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். மேலும் கார் பந்தயத்துக்காக அமைக்கப்பட்ட சாலை தரமின்றி இருப்பதாகவும் இதை மூடி மறைப்பதற்கான அனைத்து வேலைகளையும் திமுக செய்துள்ளதாகவும் கூறினார். அதோடு திமுக அரசின் கார் ரேஸினால் ஒரு காவல் உதவி ஆய்வாளரின் உயிர் பரிதாபமாக போனதாக குற்றம் சாட்டினார். மேலும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய காவல்துறையினர் தேவையில்லாத பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.