சென்னை மாவட்டம் தி.நகரில் நார்த் உஸ்மான் ரோட்டில் தங்கமயில் நகைக்கடை அமைந்துள்ளது. அங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தங்க நகைகளை சரி பார்த்த போது மூன்று சவரன் தங்க செயின் ஒன்றில் டேக் இல்லை.

அதனால் சந்தேகமடைந்த நகைக்கடை மேனேஜர் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் அதே கடையில் பணியாற்றும் ஆனந்தன்(36) என்பவர் நகையை எடுத்தது தெரியவந்தது.

அவரை விசாரித்த போது கடந்த 6-ம் தேதி கடையில் உள்ள மூன்று சவரன் நகையை திருடிவிட்டு அதற்கு பதிலாக அதே போன்று போலி நகையை வைத்ததாக ஆனந்தன் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து மேனேஜர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் பேரில் போலீசார் ஆனந்தனை கைது செய்தனர். பின்பு அவர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.