
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி, இந்தியா மற்றும் இந்திய ராணுவத்தை குறை கூறும் வகையில் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் கடும் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றிய அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாங்கள் கார்கிலில் உங்களை தோற்கடித்தோம். நீங்கள் ஏற்கனவே மிகவும் கீழே விழுந்துவிட்டீர்கள், இன்னும் எவ்வளவு கீழே விழப்போகிறீர்கள்?” என தவான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தேவையற்ற விமர்சனங்களை விட, உங்கள் நாட்டின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
இந்நிலையில் முன்னதாக செய்தியாளர்களுடன் பேசிய அப்ரிடி, “இந்தியாவில் பட்டாசு வெடித்தால் கூட அதற்கும் பாகிஸ்தான் தான் காரணம் என்று கூறுவார்கள். “காஷ்மீரில் 8 லட்சம் ராணுவ வீரர்கள் இருந்தும் தாக்குதல் நடந்தது. இந்திய அரசால் அவர்கள் சொந்த நாட்டு மக்களுக்கே பாதுகாப்பு கொடுக்க முழு முடியவில்லை என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இனி இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளில் கூட விளையாட கூடாது என்று பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் இது தொடர்பாக ஐசிசிக்கு பிசிசிஐ பரிந்துரை செய்ய இருப்பதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.