
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார். இவர் புனேவில் தன் கட்சியின் பாத யாத்திரையை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, வேலையில்லா திண்டாட்டத்தின் காரணமாக இளைஞர்களுக்கு திருமணம் செய்வதற்கு கூட பெண்கள் கிடைப்பதில்லை. விவசாயிகளுக்கு உற்பத்தி பொருளுக்கு போதிய விலை கொடுப்பதில்லை. ஏழை மக்கள் பணவீக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இன்றைய இளைஞர்கள் படித்திருக்கிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கூட வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள். 20 முதல் 30 வயதுகுட்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சில இளைஞர்களிடம் திருமணமாகி விட்டதா என்று கேட்டால் இல்லை என்கிறார்கள். அவர்களிடம் காரணத்தை கேட்டால் வேலை இல்லாத காரணத்தால் பெண் கொடுக்க மறுக்கிறார்கள் என்கிறார்கள். இந்த பிரச்சனை குறிப்பாக கிராமப்புறங்களில் அதிக அளவில் இருக்கிறது.
இப்படி வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிட்ட நிலையில் மத்தியில் ஆளும் பாஜக வேலைவாய்ப்பை அதிகரித்து புதிய தொழிற்சாலைகளை ஊக்குவிப்பதற்கு பதில் மதவாதம் மற்றும் பிரிவினை வாதத்தை பரப்பி வருகிறது. இரு சமூகத்தினரிடையே பிரச்சனையை உருவாக்க தற்காலிகமாக சில பிரச்சினைகள் உருவாக்கப்படுகிறது. ஏன் இப்படி செய்கிறார்கள் என்றால் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. மேலும் வேலையில்லா திண்டாட்டத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக தான் இது போன்ற செயல்களில் மத்தியில் ஆளும் பாஜக ஈடுபட்டுள்ளது என்று கூறினார்.