அமெரிக்க அதிபர் தேர்தலில் 295 எலக்டோரல் வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், 47வது அதிபராக பதவியேற்க உள்ளார். இதை முன்னிட்டு, தெலுங்கானா மாநிலம் ஜங்கான் மாவட்டம் கொன்னே கிராமத்தில் உள்ள டிரம்புக்காக கட்டப்பட்ட கோவிலில் கிராம மக்கள் வழிபாடு நடத்தினர்.

2018ல், கிருஷ்ணா என்ற இளைஞர் தனது பூஜை அறையில் டிரம்பின் புகைப்படத்தை வைத்து வழிபடத் தொடங்கினார். 2019ல், தனது வீட்டின் முன் 6 அடி உயர டிரம்ப் சிலையை அமைத்து, பூஜைகள் செய்து பால் அபிஷேகமும் செய்தார். இதற்காக அவர் ரூ.2 லட்சம் வரை செலவு செய்திருந்தார். இதனால் கிராமத்தில் அவரை “ட்ரம்ப் கிருஷ்ணா” என்று அழைக்கத் தொடங்கினர்.

ஆனால், 2020 அக்டோபரில் கிருஷ்ணா 33வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். இப்போது, ட்ரம்பின் வெற்றியை கொண்டாடும் வகையில், கிருஷ்ணாவின் உறவினர்கள் அவரது வீட்டில் உள்ள டிரம்ப் சிலையை சுத்தம் செய்து மாலை அணிவித்து வழிபாடு செய்தனர்.

மேலும், அமெரிக்க துணை அதிபராக தேர்வான ஜேடி வான்ஸின் மனைவி உஷா சிலுக்குரி ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால், தெலுங்கு மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.