பாலிவுட் நடிகை பூமி பெட்நேக்கர் சமீபத்தில் இந்தியாவில் பெண்கள் எதிர்கொள்ளும் அத்துமீறல்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, பெண்களுக்கு எதிரான தொடர் வன்முறைகள் அவரது மனதை கவலைப்படுத்துவதாக கூறினார். “இந்தியாவில் ஒரு பெண்ணாக இருப்பது இன்று மிகவும் பயமாக உள்ளது. இது சினிமா துறையை மட்டும் பற்றிய விஷயம் அல்ல. எனது குடும்பத்தினர் வீட்டிற்கு சரியாக வருகிறார்களா என பயமாக இருக்கும். குறிப்பாக, எனது சகோதரி இரவு 11 மணிக்கு வீடு திரும்பாத போது மனதில் ஒரு பதற்றம் உருவாகிறது,” என அவர் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார்.

மலையாள திரைப்பட துறையில் பெண்களுக்கு எதிரான பொது பாலியல் தொல்லைகள், சுரண்டல் ஆகியவை வெளிச்சத்திற்கு வந்த ஹேமா குழு அறிக்கையை பூமி பெட்நேக்கர் துயரத்துடன் கருத்து தெரிவித்தார். “இந்திய சினிமா உலகத்தில், ஒரு சட்டப்பூர்வ ஆய்வு நடந்த முதல் சம்பவங்களில் இதுவும் ஒன்று. அந்த அறிக்கையில் வந்த தகவல்கள் இதயத்தை உருக்கும்விதமாக இருந்தன. சில விவரங்களை கேட்கும்போதும் படிக்கும்போதும் மிகவும் மனவேதனை உண்டாக்கியது,” என அவர் கூறினார்.

இந்த அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது. இது மலையாள சினிமாவில் பணியிட துன்புறுத்தல் தொடர்பாக சட்டரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி என்பதில் முக்கியத்துவம் பெற்றது. இந்த நிலையில் பூமி பெட்நேக்கர் நடிப்பில் உருவான ‘Mere Husband Ki Biwi’ படம் பிப்ரவரி 21 அன்று திரைக்கு வந்தது. அர்ஜுன் கபூர், ரகுல் பிரீத் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. முதல் நாளில் இந்தியாவில் ₹1.5 கோடி வசூலித்த இப்படம், விக்கி கௌஷல் நடித்த ‘Chhaava’ படத்துடன் கடுமையான போட்டியில் உள்ளது.