வங்காள தேசத்தில் மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக வெடித்த நிலையில் பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனால் ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் இடைக்கால அரசின் தலைமை பொறுப்பை நோபல் பரிசு வென்ற முகமது யூனிஸ் ஏற்றுள்ளார். இருப்பினும் இன்னும் கலவரம் ஓய்ந்த பாடில்லை. சிறை உடைக்கப்பட்டு ஏராளமான கைதிகள் வெளியேறிய நிலையில் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தற்போது வங்காள தேசத்திலிருந்து இந்தியாவிற்குள் நுழைய ஆயிரக்கணக்கான மக்கள் முயற்சி செய்கிறார்கள்.

இவர்களை இந்திய பாதுகாப்பு படை வீரர்களான பிஎஸ்எப் தடுத்து நிறுத்துகிறது. அந்த வகையில் நேற்று காலை சுமார் 9 மணியளவில் ஆயிரக்கணக்கான மக்கள் சகர் திகி ஆற்றில் இறங்கினர். அவர்கள் இருநாட்டிற்கும் உள்ள எல்லை வேலியில் 400 மீட்டர் தொலைவில் இருந்தனர். இவர்களை பிஎஸ்எப் வீரர்கள் தடுத்து நிறுத்திய நிலையில் வங்காளதேச எல்லை படையினரிடம் அவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்லும்படி கூறினர். மேலும் வங்கதேச எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ பலரும் முயற்சிப்பதால் இதனை தடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் 5 பேர் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.