மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய துரை வைகோ, உதயநிதிக்கும் அண்ணாமலைக்கும் இடையே தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி எதுவும் கிடையாது. மும்மொழி கொள்கையா அல்லது தமிழக மாணவ செல்வங்களுக்கு உயர்வைத் தந்த இரு மொழிக் கொள்கையா என்பதுதான் தற்போது உள்ள பிரச்சனை. அண்ணாமலை தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று சொல்கின்றார். பாஜகவை தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகத்திற்கு இரு மொழி கொள்கைதான் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இன்று உலகம் முழுவதும் தமிழக இளைஞர்கள் ஆதிக்கம் செலுத்துவது இரு மொழிக் கொள்கையின் மூலமாக பயின்ற கல்வியின் மூலம் தான்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தமிழக இளைஞர்கள் ஆதிக்கம் செலுத்த முக்கிய காரணம் அவர்களுடைய ஆங்கில புலமைதான். அமெரிக்காவிலிருந்து இன்று கைவிலங்கு விட்டு அனுப்பப்பட்ட இளைஞர்கள் அனைவருமே வடமாநிலத்தை சேர்ந்தவர்கள், தமிழக இளைஞர்கள் கிடையாது. தமிழகத்திற்கு வரக்கூடிய வட இந்திய இளைஞர்களுக்கு நாம் இன்று வாழ்வாதாரம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் வட இந்திய இளைஞர்களுக்கு கல்வி கிடையாது. இந்தியை வளர்ப்பது மட்டுமல்ல ஆங்கிலத்தையும் படிப்படியாக கல்வியிலிருந்து அகற்றி விட வேண்டும் என்பதுதான் பாஜகவின் கொள்கையாக உள்ளது என துரை வைகோ காட்டமாக பேசியுள்ளார்.