
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 17 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்ட நிலையில், மும்பையில் உலக கோப்பையுடன் கிரிக்கெட் வீரர்கள் பேரணி சென்றனர். அதன்படி நேற்று முன்தினம் மும்பையில் திறந்த வெளி பேருந்தில் கிரிக்கெட் வீரர்கள் உலகக்கோப்பையுடன் பேரணியாக சென்ற நிலையில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
இதைத்தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவின் போது பிசிசிஐ ரூ.125 கோடி பரிசுத்தொகை அறிவித்தது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற மராட்டிய சட்டசபை கூட்டத்தொடரின் போது கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய அணியில் இடம்பெற்ற மும்பை வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. மேலும் அப்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.11 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.