
வங்க தேசத்தில் இட ஒதுக்கீடு காரணமாக மாணவர்களின் அமைப்பு போராட்டம் நடத்தியது. அந்த போராட்டம் பல வாரங்களாக நீடித்த நிலையில் வன்முறையாக மாறியதால் நாடு முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டது. அதனால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். எனவே பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா பதவி விலகினார்.
இதனால் இடைக்கால அரசின் புதிய தலைவராக முகமது யூனஸ் பதவியேற்றார். இருப்பினும் சிறுபான்மையினர் மற்றும் அவாமி லீக் கட்சியினரின் குடியிருப்புகள் மற்றும் இந்துக்களின் கோவில்கள் மீதும் தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தது.
இதனால் மாணவர்களும், பொதுமக்களும் வன்முறையை கைவிட வேண்டும் என்றும் சிறுபான்மை சமூக மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளத்தில் வங்கதேசம் நாட்டில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளது என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து இடைக்கால அரசு முகமது யூனஸ் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அங்கு நிலவும் சூழ்நிலைகளை குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டோம் என்றும் பிரதமர் கூறியுள்ளார். மேலும் அமைதியான மற்றும் நிலையான வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவை முகமது யூனஸ் வலியுறுத்தியதாகவும் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கு உறுதி அளித்ததாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.