உத்திரபிரதேச மாநிலத்தில் தியோபந்த் என்ற பகுதி உள்ளது. இங்கு இந்து மதத்தைச் சேர்ந்த ஆண் நபர் ஒருவருடன் இரு சிறுமிகள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சில மர்ம கும்பல் அந்த சிறுமிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அதாவது சுமார் 16 மற்றும் 17 வயதுடைய இரு இஸ்லாமிய சிறுமிகள் அங்கு பைக்கில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் வழி கேட்டுக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனைப் பார்த்த ஒருவர் இந்து நபருடன் எதற்காக பேசினீர்கள் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், அவர்கள் அணிந்திருந்த ஹிஜாப்பையும் கழட்டுமாறு கூறியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் தற்போது வெளிச்சத்திற்கு வந்தது.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமிகள் மீது தாக்குதல் நடத்திய முகமது மெஹ்தாப் (38) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்தியதில் அந்த சிறுமிகள் தங்களுடைய அண்ணனை அழைக்க போனை எடுத்த போது அதனை மர்ம கும்பல் பிடுங்கி வீசி உள்ளனர். பின்னர் அந்த இடத்தில் பொதுமக்கள் கூடிய நிலையில் அந்த சிறுமிகள் அந்த இந்து இளைஞருக்கு பரிசு கொடுத்ததால் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் கூறியுள்ளனர். அதன் பிறகு பைக்கில் வந்த இளைஞர் இந்து இல்லை என்று தெரிந்த பிறகு தான் அந்த கும்பல் சிறுமிகளை விடுவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் புகார் கொடுத்துள்ள நிலையில் ஒருவர் பிடிபட்டுள்ளார். லீக்கான வீடியோவை வைத்து மற்றவர்களை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.