சமூக வலைதள பக்கமான ரெடிட் பயனர் ஒருவர் பகிர்ந்த பதிவு தற்போது வைரல் ஆகியுள்ளது. இதன் மூலம் பெங்களூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பாராட்டுகளை பெற்று வருகிறார். ரெடிட் பதிவை பகிர்ந்த நபர் ஆட்டோ ஓட்டுநருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தான் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து தனது வீட்டிற்கு அந்த பயனர் செல்வதற்காக ஆட்டோவில் பயணித்துள்ளார். ஓட்டுநர் அதற்கு 200 ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளார். சம்மதித்த ரெடிட் பயனர் பயணத்தை தொடங்கிய போது வழியில் ஒரு இடத்தில் ஆட்டோவை நிறுத்தி பெட்ரோல் பங்க் பெட்ரோலுக்கு ஆன்லைனில் பணத்தை அனுப்புமாறு ஆட்டோ ஓட்டுனர் கேட்டுள்ளார்.

பயணியும் பெட்ரோலுக்கு பணத்தை செலுத்த அது 230 ரூபாய் என பில் வந்துள்ளது. அதற்கு ஆட்டோ ஓட்டுநர் பயணம் முடியும் போது தான் 30 ரூபாயை திருப்பித் தருவதாக கூறியுள்ளார். ஆனால் பயணம் முடிந்த சமயத்தில் பயணியும் அவசரமாக சென்றுவிட ஆட்டோ ஓட்டுநரும் பணத்தை கொடுக்க மறந்து விட்டார்.

அடுத்த நாள் காலையில் ரெடிட் பயனரின் வீட்டின் கதவை யாரோ தட்டுவதை கேட்டு கதவை திறந்தவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. முந்தைய நாள் தன்னை இறக்கி விட்டு சென்ற ஆட்டோ ஓட்டுநர் அவர் கொடுக்க வேண்டிய 30 ரூபாயை கொடுப்பதற்காக வந்திருந்தார்.

30 ரூபாயும் கொடுத்துவிட்டு நேற்று கொடுப்பதற்கு மறந்ததற்காக மன்னிப்பும் கேட்டுவிட்டு சென்றுள்ளார். இதனை தான் ரெடிட் பயனர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் தற்போது அந்த ஆட்டோ ஓட்டுநர் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.