
இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியானது பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டுமே துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்திய அணி தன்னுடைய தொடக்கத்தில் பிப்ரவரி 20 ஆம் தேதி வங்காளதேசத்தையும், 23ஆம் தேதி பாகிஸ்தானையும், மார்ச் இரண்டாம் தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது. இது பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் ஆடும் ஆட்டம் என்பதால் இப்போதே ரசிகர் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் கடைசி நேரத்தில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலகிய நிலையில் அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டார். அதேபோல தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட்ட நிலையில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி அவருடைய இடத்தை பிடித்தது பலர் மத்தியில் கேள்வியை எழுப்பியது.
ஏற்கனவே வாஷிங்கடன் சுந்தர், ஜடேஜா, அக்சர் என நான்கு ஸ்பின்னர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் ஐந்தாவதாக வருன் சக்கர வார்த்தியும் சேர்க்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்திய அணியில் 5 ஸ்பின்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளது சரியான முடிவு இல்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். மேலும் இவ்வாறான சூழலில் வருண் சக்கரவர்த்திக்காக பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவை கலைத்து விடாதீர்கள் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.