
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனியாக குடும்பம் இல்லை என்று விமர்சித்தார். இது மிகப்பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவும் தன்னுடைய குடும்பம் என்று பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். அதன் பிறகு பாஜக கட்சியின் ஆதரவாளர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் மோடியின் குடும்பம் என்பதை சேர்த்துக்கொண்டனர். இந்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் சமூக வலைதளங்களில் தங்களுடைய பெயருக்கு பின்னால் வைத்திருக்கும் மோடியின் குடும்பம் என்பதை நீக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் பிறகு பெயர்கள் மாறலாம். இருப்பினும் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் நாம் அனைவரும் ஒரே குடும்பம் தான். இந்த உறவு எப்போதும் வலிமையாகவும் உடைக்கப்படாமலும் இருக்கும். மேலும் நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்பட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்காக இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.