சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் கழிவுநீர் லாரியில் இயக்குபவர்கள் கழிவு நீர் தொட்டியில் உள்ளே மனிதர்களை இறக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது. எந்த ஒரு ஒப்பந்ததாரரும் அல்லது எந்த ஒரு நிறுவனமும் நேரடியாக அல்லது மறைமுகமாக எந்த ஒரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய ஈடுபடுத்த அல்லது பணியமர்த்தக் கூடாது.

அவ்வாறு ஈடுபடுத்தினால் முதல்முறையாக மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். இரண்டாவது முறையாக மீறுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை குடிநீர் வாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவு நீர் உந்து நிலையங்களில் மட்டுமே கழிவுநீர் வெளியேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.