நாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆலோசனை செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஒரு குழுவை நியமித்தது. இந்த குழு தங்களுடைய அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. சுதந்திர தின விழாவின் போது கூட பிரதமர் மோடி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அழுத்தமாக கூறியதோடு அரசியல் கட்சிகள் இதற்கு முழுமையாக ஒத்துழைப்பு தரவேண்டும் என வலியுறுத்தினார். இது தொடர்பாக அந்த குழு தங்கள் அறிக்கையை தாக்கல் செய்ததால் நாடாளுமன்றத்தில் விரைவில் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்வது அவசியம் என்று கூறப்பட்ட நிலையில் இதற்காக 18 அரசியலமைப்பு திருத்தங்களை குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு மாநில சட்டசபைகளின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் கிடையாது எனவும், சில அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்களை செய்த பிறகு மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தி முடிக்கலாம் என்றும் இந்த தேர்தல் முடிவடைந்து 100 நாட்கள் கழித்து உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.

இதன் காரணமாக இந்த ஆட்சி காலத்திலேயே பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த தீவிர முனைப்பு காட்டி வருவதாக  கூறப்பட்ட நிலையில் தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போதும் தாக்கல் செய்யப்படும். மேலும் இது சட்டமாக்கப்படும்போது நாடு முழுவதும் இனி நாடாளுமன்றங்கள் மற்றும் மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.